ரோபாட்டிக் லேப் ரிசர்ச் அகாடெமி (RobotixLab Research Academy ) மற்றும் கேப்ஸ்டோன் (CAPSTONE Technologies Worldwide Private Limited ) நிறுவனம் இணைந்து உருவாக்கிய சான்பாட் என்ற ரோபோவின் அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஐஐடி பேராசிரியர் டி எஸ்நடராஜன், கல்வியாளர் ஜெயந்தி ரவி,வித்யா மந்திர் கல்வி நிறுவன தாளாளர் குமரன் மற்றும்ரோபோட்டிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் நிவாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அனைவரையும் இந்த ரொபாட்டீக் லேப் ரிசர்ச் அகாடமியின் நிறுவனரான திருமதி விஜயஸ்ரீ வரவேற்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில்,“எதிர்கால இந்தியாவை வடிவமைப்பது மாணவர்கள் தான். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கொண்டரோபோக்களை பற்றிய பயிற்சியுடன் கூடிய பாடத்திட்டம் குறித்து சென்னை மற்றும் தமிழகம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இந்தத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ரோபோக்கள் செய்வதில், செயல்முறையுடன் கூடிய பயிற்சியும் அளித்து வருகிறேன். இதற்காக நாங்கள் சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஆய்வகம் ஒன்றினையும் தொடங்கியிருக்கிறோம். அத்துடன் ரோபாட்டீக் துறை தொடர்பான பாடத்திட்டத்தையும் வடிவமைத்து, அதனை திறமையான ஆசிரியர்களுடன் கற்பித்தும் வருகிறோம்.பள்ளிக்கூடம், கல்லூரிகளிலும் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களிலும் ரோபாட்டீக் தொடடர்பான பயிற்சி பட்டறைகளும், கருத்தரங்களையும் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தி வருகிறோம்.” என்றார்.
சிறப்பு விருந்தினரான பேராசிரியர் டி எஸ் நடராஜன் பேசுகையில்,“ திருமதி விஜயஸ்ரீ மாணவர்களிடம் புதைந்திருக்கும் தனித்திறனை வெளிக்கொணர்வதில் அளவற்ற ஆர்வம் கொண்டவர். மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்காக அயராது.பாடுபடுபவர். அவரது உழைப்பில் அவரது எண்ணத்தில் அவரது வழிகாட்டலில் அவரது தலைமையில் உருவாகியிருக்கும் இந்த ரோபாட்டீக் அக்காடமியையும், அதன் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் தயாராகி இருக்கும் சான்பாட் என்ற ரோபோவை தென்னிந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்துவதிலும் பெருமிதம் அடைகிறேன்.
மாணவர்களின் அறிவு குறித்தும், திறமை குறித்தும் அளவற்ற எண்ணம் கொண்டிருக்கும் இவருக்கு இந்தியக் கல்விமுறை பெரிய அளவில் ஒத்துழைப்பை வழங்குவதில்லை. ஏனெனில் தற்போதைய கல்வி முறை, மதிப்பெண்களை நோக்கி செயல்படும் திறன் கொண்ட மாணவர்களை மட்டுமே உருவாக்குகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற எண்ணப் போக்கினை கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நீச்சலடிக்க வேண்டுமென்றால், அதற்காக எந்த பாடத்திட்டத்தையும் படித்து விட்டு நீச்சலடிக்க இயலாது. நீங்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதற்காக எந்த பாடத்திட்டத்தையும் படித்துவிட்டு சைக்கிள் ஓட்ட இயலாது. அதற்கு நேரடி பயிற்சி இருக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவு இருக்கவேண்டும். இங்கு எந்த பாடத்திட்டமும், மதிப்பெண்ணும் உதவுவதில்லை. இதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும். அதேபோல்தான் இசை மற்றும் நாட்டியங்கள் உள்ளிட்ட கலைகளை கற்பதற்கும் பொருந்தும்.
இன்றைய சூழலில் நன்றாகப் படிக்கும் மாணவர்களிடம், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் ஏதேனும் ஒரு வினாவை கேட்டு அதற்கு பதில் கேட்டால், அவர்கள் சற்றும் யோசிக்காமல் உங்கள் கேள்விக்கான பதிலை தருவதற்கு ஆப்ஷன்களை கொடுங்கள் என்று என்னிடம் திருப்பிக் கேட்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் தற்போதைய கல்வி முறையால் தயாரிக்கப்பட்டு இருக்கிறார்கள். அத்துடன் இன்றைய கல்வி முறை முழுவதும் வகுப்பறை சார்ந்தும், ஆசிரியர் சார்ந்தும் தான் இயங்குகின்றன. இதனால் மாணவர்களுக்கு பயிற்சி அறிவும், நடைமுறை அறிவும் முற்றாக கிடைப்பதில்லை. தொழில் நுட்பங்கள் மீது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்தக் கல்விமுறை ஏற்றதாக இல்லை. என்னுடைய வகுப்புகளுக்கு சில மாணவர்கள் வருவதில்லை. அவர்களுக்கு இயக்குனர் ஷங்கர் ,இயக்குனர் முருகதாஸ் போன்றவர்கள் கற்பிக்கும் தொழில்நுட்பங்கள் மீது ஆர்வம் கொண்டு, அங்கு சென்று விடுகிறார்கள்.
இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது ஆசிரியர்கள் பாடதிட்டத்தை மிக விரைவாக கற்பித்து விடுகிறார்கள். பிறகு வார தேர்வு, தொடர் தேர்வு, பருவத்தேர்வு என்று தொடர்ந்து தேர்வுகளில் கலந்து கொண்டு, மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை மட்டுமே மையப்படுத்தி, மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாகவே தயாரிக்கிறார்கள். அதிலும் தற்போதைய தேர்வு முறைகளால் முழுமையான அறிவு பெற்ற மாணவர்கள் உருவாக்கப்படுவதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம். அதனால் விஜயஸ்ரீ போன்றவர்கள் கல்வி கற்றலை, கல்வி கற்பித்தலை நடைமுறை அறிவுடன், மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய கல்வியை கற்பிப்பதால் அவர் உருவாக்கியிருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் பற்றிய பாடத்திட்டத்தை வரவேற்கிறேன். இது எதிர்கால மாணவர்களுக்கு சிறந்த முறையில் அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் பயனளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் இந்த ரோபாடிக்ஸ் குறித்த பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து கற்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு என்னாலான உதவிகளை செய்வதற்கு ஆர்வமுடன் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையில் தேர்வு என்பது இல்லாதிருந்தால் மாணவர்கள் அதிக அளவில் விருப்பத்துடன் கற்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன். மாணவர்களும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான தங்களுக்கு விருப்பமான துறையில் போதிய நடைமுறை அறிவுடன் கூடிய கல்வியைப் பெறுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். பெற்றோர்களும், தற்போதைய கல்வி முறையும் தான் இவர்களுக்கான ஒரு வழிகாட்டலை காட்டுவதற்கு தவறியிருக்கின்றன. இதனை விஜயஸ்ரீ போன்றவர்கள் நுட்பமாக கண்டறிந்து, அவர்களுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கிறார்கள் .
சென்னை தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் விஜயஸ்ரீ தொடங்கியிருக்கும் இந்த ரோபாடிக்ஸ் தொடர்பான பாடதிட்டம் மற்றும் பயிற்சி திட்டத்தை, கற்பித்தல் முறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
புதிய புதிய கண்டுபிடிப்புகளுடன், ஐடியாக்களுடன் வரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவதற்கும், வழிகாட்டுவதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரோபோக்கள் உருவாக்குவது குறித்தும், ரோபோக்கள் பற்றிய கல்வியை படிப்பதும் தற்போதைய சூழலில் அவசியமாக இருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் மருத்துவமனை, ஹோட்டல் , வகுப்பறை, பாதுகாப்பு, பருவநிலை, விளையாட்டு உள்ளிட்ட பல மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கும். அப்போது விஜயஸ்ரீ போன்றவர்களின் தன்னலமற்ற உழைப்பு போற்றப்படும் என்றும் கருதுகிறேன். இந்த நோக்கத்திற்காக இவர்களின் ரோபாட்டீக் லேப் ரிசர்ச் அகாடமியிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் சான்பாட் என்ற ரோபோக்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் குமரன் பேசுகையில்,“ தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கல்விமுறை அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்களுக்கு போதுமானதாக இல்லை என்று பல கல்வியாளர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூட நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கிறது. அதற்காக நாங்கள் எங்களை எப்பொழுதும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். பல புதிய புதிய பாடத்திட்டங்களையும், நடைமுறை அறிவுடன் கூடிய கல்வி முறையையும் அறிமுகப்படுத்த தயாராகவே இருக்கிறோம். 2032 ஆம் ஆண்டில் எப்படி இருக்கும் என்பதை தற்போது நம்மால் உறுதியாக கூற இயலாது. இருந்தாலும் மாணவர்கள் அந்தக் காலகட்டத்திய சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு நாம் தற்போதிலிருந்தே திட்டமிட்டு தயார்படுத்த வேண்டும். என்னுடைய கணிப்பின் படி அந்த காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோக்களின் ஆதிக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த உலகம் முழுவதும் ரோபோக்களின் பயன்பாடு இயல்பான ஒன்றாக இருக்கும். அதனால் விஜயஸ்ரீ போன்றவர்கள் ரோபோடிக்ஸ் துறையில் எதிர்கால வளர்ச்சி குறித்தும், அதற்கான திட்டம் குறித்தும் விளக்கம் அளித்த போது, அதன் நோக்கம் குறித்து, அதன் எதிர்காலம் குறித்தும் மாணவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கத்தில் உடனடியாக என்னுடைய பள்ளியில் அவர்களின் சேவையை வழங்க ஒப்புக் கொண்டோம்.” என்றார்.
கல்வியாளர் ஜெயந்தி ரவி பேசுகையில்.“தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி முறை ஒவ்வொரு மாணவரின் தனி அடையாளங்களை கண்டறிந்து வெளிப்படுத்துவதாக இல்லை. அது மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. அத்துடன் மெதுவாக கல்வி கற்கும் மாணவர்களுக்கும், வேகமாக கல்வியை கற்கும் மாணவர்களுக்கும் பொருத்தமானதாக இல்லை என்பது நடைமுறை உண்மை. நான் அண்மையில் தமிழக அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அவர்களிடம் மாணவர்கள் ஐந்து மதிப்பெண் அளவிற்காவது அவர்களாகவே சுயமுயற்சியில் பாடத்திட்டங்களை புரிந்துகொண்டு ஐந்து மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்று விளக்கமாக எடுத்துரைத்தேன். இதன் பிறகு பேச வந்த ஆசிரியர், உடன் பணிபுரியும் ஆசிரியர்களிடம், இதிலிருந்து ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொண்டோம். அது என்னவெனில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து நிலைகளிலும் 5 மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். நான் உடனே இடைமறித்து, ஐந்து மதிப்பெண் வழங்குவது அல்ல. அவர்களாகவே மாணவர்களாகவே உங்களுடைய கற்பித்தல் முறை மூலம், ஐந்து மதிப்பெண் பெறும் அளவிற்கு அவர்களின் நடைமுறை அறிவு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று விளக்கம் அளித்தேன். இதன்மூலம் ஆசிரியர்களிடம் கல்விமுறை பற்றிய புரிந்துணர்வு முழுமையாக இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து 50க்கும் மேற்பட்ட பயிற்சிப்பட்டறைகளை நடத்தி, ஆசிரியர்களிடம் புரிந்துணர்வையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன்.
ஆசிரியர்களிடம் ஒவ்வொரு மாணவர்களின் தனி திறனையும், அவர்கள் விருப்பமாக உள்ள துறை அல்லது பிரிவு குறித்து கண்டறிய வேண்டும் என்றும், அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அதே போல் ஆசிரியர்கள் வகுப்பறையில் இருக்கும்போது, மாணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. ஆதிக்க மனப்பான்மையுடன் கற்பிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினேன். இதனால் மெதுவாக கல்வி கற்கும் மாணவர்கள், கல்வி கற்பதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்று எடுத்துரைத்தேன்.
இந்நிலையில் மாணவர்களின் தனித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் விஜயஸ்ரீ அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபாட்டிக்ஸ் துறையின் பாடத்திட்டம் மற்றும் நடைமுறை அறிவுடன் கூடிய கல்வித் திட்டத்தை நான் மனதார வரவேற்கிறேன். இதனை அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
கேப்ஸ்டோன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ராஜேஷ் நிவாஸ் பேசுகையில்,“இந்த துறையின் வளர்ச்சி எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த துறையில் முதலீடு செய்திருக்கிறேன்.வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பொதுமக்களின் பாதுகாப்பு, விளையாட்டு, வகுப்பறை, பள்ளிகூடங்கள், கல்லூரி, பருவநிலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் துறைகளில் ஹியூமனாய்ட் ரொபாட்டீக் எனப்படும் ரோபோக்களின் தேவை அதிகரிக்கும் போது, எங்களின் சேவையும் அதிகரிக்கும். இதற்கான அடிப்படை கட்டமைப்புகளையும், தொழில்நுட்ப அறிவையும் நாங்கள்வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்தியாவில் முதன்முறையாக நாங்கள் சான்பாட்டை அறிமுகம் செய்கிறோம். இது மக்களுக்கு சேவை செய்துஇந்த துறை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்
No comments:
Post a Comment